Sunday, March 28, 2010

முகமற்றவர்களின் குரல்

வறுமை மரணத்தின் மற்றொரு முகம்
- இலத்தீனிய பழமொழி
உலகில் நடைபெறும் எல்லா புரட்சிகளுக்கும் , ஆட்சி மாற்றங்களுக்கும், அரசியல் சித்தாந்தங்களுக்கும் அடிப்படை காரணியாக விளங்குவது வறுமை. கண்ணுக்கு தெரியாத அந்த மிருகம் மனிதனின் அடிப்படை குணமான தன்மானத்தையும் , அடிப்படை உரிமைகளை கேட்கும் மனோபாவத்தையும் வேரறுத்து விடக் கூடியது.
தமிழின் புதிய அலை இயக்குநர்களின் பட்டியலில் வெயில் மூலம் இடம் பிடித்த வசந்த பாலன் தன் புதிய படைப்பான அங்காடித்தெரு வில் சென்னையின் வணிகத் தலைமையிடமாக கொண்டாடப்படும் ரங்கநாதன் தெருவின் பாதாள உலகை விவரித்திருக்கிறார். பளபளக்கும் அடுக்கு மாடி கட்டடங்களாய் விரிந்து, அழகு நடிகைகளின் நடனத்தினால் நம்மை ஆகர்ஷிக்கும் கடைகளின் செழுமை பலரின் வியர்வைகளை திருடப்பட்டு உருவானவை என்பது கசக்கும் உண்மை. தென்மாவட்டங்களில் நிலவி வரும் வறுமையை மூலதனமாக்கி அவர்களின் உழைப்பை உறிஞ்சும் அண்ணாச்சிகளின் முகத்திரையை கிழித்திருக்கிறார் இயக்குநர்.
இப்படத்தின் பாத்திரங்கள் நாம் அன்றாடம் எதிர்படும் முகமற்ற எளிய கடைப்பெண்கள்/ பையன்கள். நாம் கவனிக்க மறக்கும்/மறுக்கும் அவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களின் எளிய சந்தோஷங்கள், துக்கங்கள், மனித நேயம், காதல்கள்,பயம், கொத்தடிமை வாழ்வு முறை ஆகியவை மிக யதார்த்தமாக நேர்மையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
வானமே கூரையாக , உலகையே தன் வீடாக பாவிக்கும் ஒரு ஜோடியின் சந்தோஷ விளையாட்டுக்களில் படம் தொடங்குகிறது. தெருவோரம் உறங்கும் அவர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராட , நாயகனின் நினைவலைகளில் படம் பின்னோக்கி செல்கிறது. நெல்லை கிராமமொன்றில் வசித்து வந்த அவன் நன்றாக படித்தும் அப்பாவின் துர்மரணத்தால் இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட சென்னையின் அடுக்குமாடி கடையொன்றில் பணியாளனாகிறான். அவனைப்போல் ஆண்களும் பெண்களுமாய் சுமார் நூறு பேர் அங்கு பணியாற்றுகின்றனர்.
காலை முதல் இரவு வரை கால் கடுக்க நிற்கும் வேலை, இரக்கமற்ற மேற்பார்வையாளர்களின் கெடுபிடிகள், வாந்தியெடுக்க வைக்கும் உணவுக்கூடம், சண்டையிட்டு பெறப்படும் மோசமான உணவு, கொட்டடியில் போர் சடலங்கள் போல உறங்கும் அவலம், மனித உரிமையற்ற முறையில் அவர்கள் நடத்தப்படும் விதம், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் என அவர்களின் இருண்ட பக்கங்கள் திரையில் விரிகையில், இது நாம் வாழும் நகரம் தான் எனும் உணர்வு நம்மை தலைகுனிய வைக்கிறது.
அங்கு அவனுக்கு ஏற்படும் காதலும், காதலை அடக்கும் நிர்வாகமும், அவனது அத்துமீறலும் தான் கதை. படம் நெடுக உணர்வெழுச்சி நிரம்பிய காட்சிகள் நிறைய உள்ளன. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய காட்சிக்கோர்வை மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் இயல்பாக உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் நெல்லை வட்டார வழக்கு அந்த காட்சிக்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நிஜத்திற்கு மிக அருகில் இருப்பது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
சில காட்சிகளில் 'ஏலெ' அளவுக்கு அதிகமாக வருவதை தவிர்த்திருக்கலாம். இடைவேளைக்கு பிறகு கிளைக்கதைகளினால் திரைக்கதை அலைபாய்கிறது.
அனைத்து நடிகர்களுமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். முக்கியமாக நாயகி ஆனந்தி முகபாவங்களை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் வெங்கடேஷ் தான் நல்ல நடிகர் என நிரூபித்திருக்கிறார். எனவே இனி படங்களை இயக்கி நம்மை கொடுமைப்படுத்த மாட்டார் என நம்புவோமாக. கவிஞர் விக்கிரமாதித்யன் விளிம்பு நிலை கவிஞர்தான். அதற்காக திரைப்படங்களிலும் அதே பாத்திரம் தான் கொடுக்க வேண்டுமா? நிர்க்கதியாகி, நொந்து போய், இயலாமையால் தன் வாழ்வை பழித்துப் பேசும் பாத்திரத்தில் specialist ஆகி விடுவார் என நினைக்கிறேன்.
ஜெயமோகனின் இயல்பான வட்டார மொழி வசனங்கள் படத்திற்கு மேலும் நம்பகத்தன்மை அளிக்கின்றன.
எந்த ஒரு நல்ல இயக்குநரின் படத்தைப் போலவே இதிலும் ஒளிப்பதிவு, இசை, படக்கோர்வை என தொழில்நுட்ப சங்கதிகள் எல்லாமே படத்துடன் இசைந்து வந்திருக்கின்றன.
இந்த படத்தைக் காணும் யாவருக்கும் அடுத்த முறை கடைக்கு செல்கையில் அங்கிருக்கும் பணியாளர்கள் மீதான பார்வை நிச்சயம் மாறியிருக்கும். தமிழின் புதிய அலை படங்கள் குறித்த நம் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.

No comments: