Sunday, December 28, 2014

பிகேவும் பிசாசும்வெகு நாட்களுக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டு படங்கள் - பிகே மற்றும் பிசாசு. இவ்விரண்டு படத்தின் இயக்குநர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும்  திரைக்கதைகளை தம் பிரத்யேக பார்மெட்களில் உருவாக்குபவர்கள். இந்த பார்மெட் அலுக்கும்போதோ அல்லது கதை தன்னளவில் அந்த பார்மெட்டிற்கு ஏற்றதாக இல்லாமலிருக்கும் போதோ தான் சிக்கல் வருகிறது.
முதலில் பிகே.
ராஜ்குமார் ஹிரானியின் திரைக்கதைகள் இப்படி இருக்கும். நடைமுறையில் நாம் ஒப்புக்கொள்ளும் ஒரு சூழல். வெளியிலிருந்து வரும் நாயகன் அந்த சூழலுக்கு தன்னை ஒப்புக்கொள்ள மறுத்து அந்த சூழலின் அபத்தங்களை கோடிட்டு அதன் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்குகிறான். அதனால் பாதிக்கப்படும் அச்சூழலின் தலைவர்/ பயன்தாரர் எதிர் நாயகன். அவர் நாயகனை வெளியேற்ற அடக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் அதனை நாயகன் முறியடிப்பதும் திரைக்கதையாக பயணிக்கும். பின் ஒர் அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகான உணர்ச்சிகரமான மனமாற்றத்தில் படம் நிறைவடையும்.
ஹிரானி எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்கும் லாவகமே தனி.  வித்தியாசமான ஐடியாக்களின் மூலம் டெமோ காண்பிப்பார் அல்லது எளிய உதாரணங்களின் வழியாக அபத்தங்களை சுட்டிக் காட்டுவார்.
பிகேவும் இதே பார்மெட்டில் முயற்சிக்கப்பட்ட படம்தான்.

இங்கு சூழல், நமது மத நம்பிக்கைகள். அவற்றை கேள்விக்குள்ளாக்குபவர் வேற்றுகிரகவாசி.  அதனால் பாதிக்கப்படுபவர் மதகுரு. அவ்வளவுதான். தமிழில் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா முதல் விவேக் வரை காமெடி ட்ராக்கில் செய்ததை முழு நீள படமாக கொடுத்திருக்கிறார்கள். ஹிந்தி ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது புரட்சிகரமான கருத்தாக இருக்கலாம். நமக்கு பழக்கப்பட்டவை என்றாலும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யமாய் இருப்பதால் தப்பிக்கின்றன.
ஹிரானியின் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் திரைக்கதை முழுக்கவே விரவியிருக்கும் innovative ஐடியாக்கள். முன்னாபாயில் கட்டிப்பிடி வைத்தியம் மற்றும் காந்திகிரி, 3 இடியட்ஸில் பிரசவக்காட்சி, சமத்கார் பேச்சு, வைரஸ் இன்வெர்டர் என பல காட்சிகள். ஆனால் இந்த படத்தில் பணம் மற்றும் உடைகள் எடுக்கும் காட்சியைத் தவிர பெரிதாய் எதுவும் தேறவில்லை.  
அந்த ராங்க் நம்பர் ஐடியாவே ஒரு பெரிய லாஜிக் பொத்தல். பிரச்சினைக்கு அவர்கள் சொல்லும் தீர்வும் சமாளிஃபிகேஷன்ஸ் ஆஃப் இண்டியாவாக இருக்கிறது. க்ளைமாக்சுக்கு முந்தைய ரயில் வெடிகுண்டு காட்சி (முன்னாபாயில் ஜாஹிரின் மரணம் போன்றது) எந்த உணர்வுகளையுமே அளிக்காமல் கடந்து விடுகிறது.
ஆனால் க்ளைமாக்ஸ் எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறது. அதைப் போலவே நெகிழ்வான காட்சிகள் இரண்டு மூன்று உண்டு. கூடவே படமும் போரடிக்காமல் செல்கிறது. வேறு என்ன வேண்டும்? கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் அவரது முந்தைய படங்களை ஒப்பிடுகையில் அவருக்கு இது ஒரு எச்சரிக்கை மணி.

அடுத்து பிசாசு
மிஷ்கினின் கதைமாந்தர்கள் உணர்ச்சி கொந்தளிப்புடன் அலைபவர்கள். ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனும் ஒரு உணர்ச்சியை வசனம், பார்வை அல்லது உடல் மொழி மூலமாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவர்கள். காட்சி மொழி என்ற சொற்பிரயோகம் சமகாலத்தில் பரவலாகியதே அவரது படங்களினால் தான். அவரது திரைப்படத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டமுண்டு. ஆனால் வணிக ரீதியிலான் வெற்றியை ருசிக்க அவரது ரசிகர் கூட்டம் போதாது என்பது அனுபவ ரீதியிலான் பாடம். எனவே இந்த முறை அவரது புதிய டார்கெட் ஆடியன்ஸ் - பெண்கள். பொதுவாக மிஷ்கினின் படங்களுக்கு பெண்கள் கூட்டம் இருந்ததில்லை - அஞ்சாதே -விதிவிலக்கு, சித்திரம் பேசுதடி -அவர் படமே அல்ல. காரணம் அதிகமான வன்முறை, நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் இல்லாமை, அதீத உணர்வுகளின் வெளிப்பாடு (மென்சோகம் என்ற பேச்சுக்கே இடமில்லை) . ஆனால் இந்த முறை தனது பிரத்யேகமான காட்சிமொழியினால் வழக்கமான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டதோடல்லாமல் பெண்களை கவரும் அம்சங்களை (உருக்கமான காதல் கதை, அமானுஷ்யம், இடைவேளை வரையிலான ஹாஸ்யங்கள், அம்மா மகன் இயல்பான உறவு, பெண்ணுக்காக உருகும் அப்பா, அநியாயத்தை தட்டிக் கேட்கும் அம்மா, பின் அவருக்கே உதவுவது) கதையில் நுழைத்து அவர்களையும் அரங்கிற்கு அழைப்பதில் வெற்றி கண்டு விட்டார்.
அவரது வழக்கமான படங்களைப் போல ஒரு சாலை விபத்தினை தொடக்கக் காட்சியாய் கொண்டுள்ள இப்படம் அமானுஷ்யம், சஸ்பென்ஸ் த்ரில்லர், காதல் கதை என கலந்து கட்டி அடிக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும்    நாமும் கூட இயக்குநரது கட்டுப்பாட்டில் இருக்கிறோம். தொடக்கக் காட்சியிலேயே க்ளைமாக்ஸுக்கு தேவையான எல்லா குறிப்புகளையையும் கொடுத்து விட்டு கடைசியில் ஒவ்வொன்றாய் சாமர்த்தியமாய் விலக்குகிறார்  நான் தான் முதல்லே சொல்லிட்டேனே என்ற நமட்டுச் சிரிப்புடன்.  
அவரது படங்களிலேயே ஜனரஞ்சகமான படம் இதுதான். வழக்கமாக அவரது கதைமாந்தர்கள் விநோதமானவர்கள், ஒழுங்கற்றவர்கள்.  ஆனால் இந்த படத்தில் அமானுஷ்யம் என்ற ஒற்றை விஷயத்தை தவிர எல்லாமே இயல்பானவை. நாயகனின் வீடு நேர்த்தியாக இருக்கிறது. (ஜேகேவின் அறை நினைவுக்கு வருகிறதா) நாயகிக்கு பார்த்த மாத்திரத்திலேயே காதல் வருகிறது. நாயகன் அம்மாவின் மீது உயிரை வைத்திருக்கிறான். அம்மாவிற்கு கட்டுப்பட்டு நடக்கிறான். பியர் குடிப்பதற்கே அம்மா அதிர்ச்சியாகும் அளவுக்கு நல்ல பையனாக இருக்கிறான். இதெல்லாம் மிஷ்கின் படத்தில் காணப்பெறாதவை.
முன்பே கூறியது போல தனது பாணியிலேயே பெண்கள் உட்பட சகலரையும் கவரும் படமெடுக்கும் லாவகம் அவருக்கு வந்து விட்டது. ஆனால் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இதில் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றும். அதற்கு காரணம், முந்தைய படங்கள் எல்லாவற்றிலும் எதிர் நாயகன் சமூகத்திற்கே ஆபத்தானவன் என்ற முறையில் நாயகனின் செயல்பாட்டில் ஒரு சமூக நோக்கம் இருக்கும். ஆனால் இந்த படம் தனி மனித பிரச்சினைகள் என்ற அளவில் முடங்கி விடுகிறது. அது தான் இந்த படத்தின் பலமும் பலவீனமும்.

Saturday, June 2, 2012

மறுவருகை

reentry  க்கு தமிழில் இப்படியும் சொல்வார்களோ
நிலக்கரி லாப நோக்கில் கொடுக்கப் பட வில்லை - மத்திய அரசு . தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப் படும் நிலக்கரியும் ஸ்பெக்டரமும் சேவை நோக்கில் கொடுக்கப் படும். மக்களுக்கு கொடுககும் பெட் ரோல் மட்டும் லாப நோக்கில் கொடுக்கப் படும். என்னே ஒரு பாலிஸி

Sunday, March 28, 2010

முகமற்றவர்களின் குரல்

வறுமை மரணத்தின் மற்றொரு முகம்
- இலத்தீனிய பழமொழி
உலகில் நடைபெறும் எல்லா புரட்சிகளுக்கும் , ஆட்சி மாற்றங்களுக்கும், அரசியல் சித்தாந்தங்களுக்கும் அடிப்படை காரணியாக விளங்குவது வறுமை. கண்ணுக்கு தெரியாத அந்த மிருகம் மனிதனின் அடிப்படை குணமான தன்மானத்தையும் , அடிப்படை உரிமைகளை கேட்கும் மனோபாவத்தையும் வேரறுத்து விடக் கூடியது.
தமிழின் புதிய அலை இயக்குநர்களின் பட்டியலில் வெயில் மூலம் இடம் பிடித்த வசந்த பாலன் தன் புதிய படைப்பான அங்காடித்தெரு வில் சென்னையின் வணிகத் தலைமையிடமாக கொண்டாடப்படும் ரங்கநாதன் தெருவின் பாதாள உலகை விவரித்திருக்கிறார். பளபளக்கும் அடுக்கு மாடி கட்டடங்களாய் விரிந்து, அழகு நடிகைகளின் நடனத்தினால் நம்மை ஆகர்ஷிக்கும் கடைகளின் செழுமை பலரின் வியர்வைகளை திருடப்பட்டு உருவானவை என்பது கசக்கும் உண்மை. தென்மாவட்டங்களில் நிலவி வரும் வறுமையை மூலதனமாக்கி அவர்களின் உழைப்பை உறிஞ்சும் அண்ணாச்சிகளின் முகத்திரையை கிழித்திருக்கிறார் இயக்குநர்.
இப்படத்தின் பாத்திரங்கள் நாம் அன்றாடம் எதிர்படும் முகமற்ற எளிய கடைப்பெண்கள்/ பையன்கள். நாம் கவனிக்க மறக்கும்/மறுக்கும் அவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களின் எளிய சந்தோஷங்கள், துக்கங்கள், மனித நேயம், காதல்கள்,பயம், கொத்தடிமை வாழ்வு முறை ஆகியவை மிக யதார்த்தமாக நேர்மையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.
வானமே கூரையாக , உலகையே தன் வீடாக பாவிக்கும் ஒரு ஜோடியின் சந்தோஷ விளையாட்டுக்களில் படம் தொடங்குகிறது. தெருவோரம் உறங்கும் அவர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராட , நாயகனின் நினைவலைகளில் படம் பின்னோக்கி செல்கிறது. நெல்லை கிராமமொன்றில் வசித்து வந்த அவன் நன்றாக படித்தும் அப்பாவின் துர்மரணத்தால் இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட சென்னையின் அடுக்குமாடி கடையொன்றில் பணியாளனாகிறான். அவனைப்போல் ஆண்களும் பெண்களுமாய் சுமார் நூறு பேர் அங்கு பணியாற்றுகின்றனர்.
காலை முதல் இரவு வரை கால் கடுக்க நிற்கும் வேலை, இரக்கமற்ற மேற்பார்வையாளர்களின் கெடுபிடிகள், வாந்தியெடுக்க வைக்கும் உணவுக்கூடம், சண்டையிட்டு பெறப்படும் மோசமான உணவு, கொட்டடியில் போர் சடலங்கள் போல உறங்கும் அவலம், மனித உரிமையற்ற முறையில் அவர்கள் நடத்தப்படும் விதம், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் என அவர்களின் இருண்ட பக்கங்கள் திரையில் விரிகையில், இது நாம் வாழும் நகரம் தான் எனும் உணர்வு நம்மை தலைகுனிய வைக்கிறது.
அங்கு அவனுக்கு ஏற்படும் காதலும், காதலை அடக்கும் நிர்வாகமும், அவனது அத்துமீறலும் தான் கதை. படம் நெடுக உணர்வெழுச்சி நிரம்பிய காட்சிகள் நிறைய உள்ளன. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய காட்சிக்கோர்வை மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் இயல்பாக உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் நெல்லை வட்டார வழக்கு அந்த காட்சிக்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நிஜத்திற்கு மிக அருகில் இருப்பது நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
சில காட்சிகளில் 'ஏலெ' அளவுக்கு அதிகமாக வருவதை தவிர்த்திருக்கலாம். இடைவேளைக்கு பிறகு கிளைக்கதைகளினால் திரைக்கதை அலைபாய்கிறது.
அனைத்து நடிகர்களுமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். முக்கியமாக நாயகி ஆனந்தி முகபாவங்களை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் வெங்கடேஷ் தான் நல்ல நடிகர் என நிரூபித்திருக்கிறார். எனவே இனி படங்களை இயக்கி நம்மை கொடுமைப்படுத்த மாட்டார் என நம்புவோமாக. கவிஞர் விக்கிரமாதித்யன் விளிம்பு நிலை கவிஞர்தான். அதற்காக திரைப்படங்களிலும் அதே பாத்திரம் தான் கொடுக்க வேண்டுமா? நிர்க்கதியாகி, நொந்து போய், இயலாமையால் தன் வாழ்வை பழித்துப் பேசும் பாத்திரத்தில் specialist ஆகி விடுவார் என நினைக்கிறேன்.
ஜெயமோகனின் இயல்பான வட்டார மொழி வசனங்கள் படத்திற்கு மேலும் நம்பகத்தன்மை அளிக்கின்றன.
எந்த ஒரு நல்ல இயக்குநரின் படத்தைப் போலவே இதிலும் ஒளிப்பதிவு, இசை, படக்கோர்வை என தொழில்நுட்ப சங்கதிகள் எல்லாமே படத்துடன் இசைந்து வந்திருக்கின்றன.
இந்த படத்தைக் காணும் யாவருக்கும் அடுத்த முறை கடைக்கு செல்கையில் அங்கிருக்கும் பணியாளர்கள் மீதான பார்வை நிச்சயம் மாறியிருக்கும். தமிழின் புதிய அலை படங்கள் குறித்த நம் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.

Monday, March 1, 2010

வன்முறை - ஒரு தீரா கொடுங்கனவு

மானுடம் உருவான காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் மாபெரும் எதிரியாக வன்முறையே இருந்து வந்துள்ளது. அதற்கு தீர்வான அன்பை வளர்ப்பதற்கு முன்மொழியப்பட்ட மதங்களே தற்போது வன்முறையின் ஊற்றுக்கண்ணாக உள்ளது காலத்தின் நகைமுரண். வன்முறை ஒரு தீரா கொடுங்கனவாய் நம் வாழ்வை பின் தொடர்ந்து வருகிறது. அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களை மையமாக கொண்ட படம்தான் WALTZ WITH BASHIR.

கோட்டுச் சித்திர(animation) திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கானவை என்ற பரவலான கருத்தை முதலில் உடைத்தது ஒரு ஈரானியப் பெண்ணின் கதையை இசுலாமிய புரட்சியின் பின்புலத்தில் கூறிய ஃப்ரெஞ்ச் திரைப்படமான persepolis. அடுத்து 2008 இல் வெளியான இஸ்ரேலிய புனைவிலி விவரணப் படமான WALTZ WITH BASHIR.

முதல் காட்சியில் உக்கிரமானதொரு நாய்க் கூட்டம் நகரின் சாலைகளில் வெறி கொண்டு ஒடுகிறது. மக்கள் பயந்து இரு பக்கமும் சிதறியடித்து ஓடுகிறார்கள். அவற்றில் ஒரு நாய் மூச்சிரைக்க, எச்சில் ஒழுக, நின்று குரோதத்துடன் நம்மை பார்க்கும் அந்த ஒரு நொடி அண்மைக் காட்சியில் கோட்டுச் சித்திரம் என்பதையும் மீறி முதுகுத் தண்டு சில்லிடுகிறது. அவை எல்லாம் ஒரு வீட்டின் முன் கூடி நின்று குரைக்கின்றன.

ஒரு பாரில் இந்த படத்தின் இயக்குநர் அரி போல்மன்னிடம் இக்காட்சியை விவரிக்கும் நண்பன் அவை தன்னை கொல்லத்தான் கூடியிருப்பதாகவும் இக்கனவு இரண்டரை வருடங்களாக தொடர்ந்து வருவதாகவும் கூறுகிறான். இதற்கு காரணமாக லெபனான் போரில் தான் மனிதர்களை கொல்ல பயந்ததனால் இரவில் இடையூறு விளைவிக்கும் நாய்களை கொல்ல பணிக்கப்பட்ட போது 26 நாய்களை கொன்றதாகவும், அவற்றின் ஒவ்வொரு முகமும் நினைவிருப்பதாகவும் அவை தான் தினமும் கனவில் வருவதாகவும் கூறுவதோடு அதே போரில் பணியாற்றிய இயக்குநருக்கு இது போல ஒரு சம்பவமும் நினைவில்லையா என்றும் வினவுகிறான். தான் பணியாற்றிய போரை குறித்த நினைவுகள் தனக்கு இல்லாதது குறித்து ஆச்சரியமடையும் இயக்குநர் அது குறித்த தனது தேடல்களை தொடங்குகிறார்.

இத்திரைப்படத்தை புரிந்து கொள்ள சில பின்புல தகவல்கள் அவசியமாகின்றன. 1982 இல் இஸ்ரேல் அரசு தெற்கு லெபனானிடமிருந்து வந்த பாலஸ்தீன தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்க 40 கி.மீ பாதுகாப்பு வட்டத்திற்கு லெபனானிலுள்ள தீவிரவாதிகளை ஒழிக்க தன் ராணுவத்தை அனுப்பியது . ஆனால் அப்போது . இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராய் இருந்த ஏரியல் ஷரோனிடம் வேறொரு ரகசிய திட்டம் இருந்தது. தன் ராணுவத்தை பெய்ரூட் வரை அனுப்பி அங்கு க்ரிஸ்டியன் பலாங்கிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஷீர் கெமாயலை அதிபராக்குவதன் மூலம் சிரியா பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என்று கணக்கிட்டார்.

இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட்டின் நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்த போது உண்டான பாலஸ்தீன ஒப்பந்தப்படி பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீன போராளிகள் அனைவரும் துனீஷியாவுக்கு வெளியேறினார்கள். அந்த வாரத்தில் லெபனான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் பிரியத்துக்குரிய பஷீர் ( பெய்ரூட் நகரெங்கும் அவரது முகமே நிறைந்திருக்கிறது.) கொல்லப்படுகிறார்.(ராஜீவ் காந்தி நினைவுக்கு வருகிறாரா?)

அன்று இரவு பஷீர் கட்சியை சேர்ந்த பாலங்கிஸ்ட் ராணுவத்தினர் பாலஸ்தீன முஸ்லீம்கள் நிரம்பியிருக்கும் சாப்ரா மற்றும் ஷாடிலா அகதிகள் முகாம்களுக்குள் நுழைகின்றனர். இஸ்ரேலியத் துருப்புக்கள் முகாம்களை சுற்றியிருக்க உள்ளே கொடூரமான படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.சுமார் 3500 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

இந்த இனப்படுகொலைதான் படத்தின் மையம். இயக்குநருக்கு போரைப் பற்றிய நினைவுகளில் இந்த படுகொலை நாளன்று தான் நீரிலிருந்து எழுந்து வருவது போன்ற ஒற்றை பிம்பத்தை தவிர ஒன்றுமே நினைவிலில்லை. தன்னுடன் பணிபுரிந்தவர்களை தேடிப் பிடித்து பேசுகிறார். நத்தை தன் கூட்டை சுமந்து கொண்டு செல்வதைப் போல ஒவ்வொரு போர் வீரனும் தன்னுடன் ஒரு கதைக்கிடங்கை சுமந்து செல்கிறான். ஒவ்வொருவரும் அவ்ர்களை பாதித்த சம்பவங்களைக் குறித்து சொல்கிறார்கள். ஒரு நண்பர் கரையிறங்கியவுடன் பயத்தினால் கண்ணில் கண்டதையெல்லாம் சுட்ட சம்பவத்தை கூறுகிறார். ஒரு கார் அவர்களை எதிர்பட ஒட்டுமொத்த துருப்பும் அந்த காரை குறி வைத்து சுட்டுத்தள்ளுகிறது. சில நிமிட துப்பாக்கிச்சூட்டிற்குப் பின் அவர்கள் காரை நெருங்குகிறார்கள. உள்ளே ஒரு அப்பாவி குடும்பம் பலியாகி கிடக்கிறது. இன்னொருவர் தங்களை தாக்க வந்த ஒரு பொடியனை அனைவரும் சேர்ந்து சுட்ட சம்பவத்தை சொல்கிறார். இப்படி படம் முழுவதும் சம்பவங்கள் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டபடி செல்கின்றன. போரின் வலியை நம் மீது இறக்கி வைக்கிறார் இயக்குநர்.

போரின் போது செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் படுகொலை தினத்தன்று நடந்த சம்பவங்களை விவரிக்கிறார். படுகொலைக்குப் பின் முகாமிற்குள் செல்கிறார். சிதிலமடைந்த வீடுகளும் சிதறிக்கிடக்கும் உடல்களும் அதிர வைக்கிறது. சிதிலங்களுக்கு மத்தியில் ஒரு சிறு கை அவர் கவனத்தை ஈர்க்கிறது. சின்னஞ்சிறு கை. அருகில் செல்கிறார். சுருள் முடி தெரிகிறது. கூர்ந்து பார்த்தால் ஒரு பெண் குழந்தையின் முகம். மூக்கு வரை மட்டுமே வெளித்தெரிந்த முகம்.

கூட்டமாய் பெண்கள் ஓலமிட்டுக் கொண்டே வருகிறார்கள். அவர்கள் அருகில் வருகையில் அது வரை கோட்டுச் சித்திரமாயிருந்த படம் திடீரென உயிர் பெற்று நம்மை அதிர வைக்கிறது. இது அத்தனையும் நடந்த சம்பவம் எனும் நிஜம் முகத்தில் அறைகிறது. காமிரா முன் வயிறு எரிய சாபமிடுகிறார்கள். அந்த பகுதிக்கு SUB- TITLE இல்லை. அவர்கள் மொழியும் தெரியாது. ஆனாலும் அந்த ஓலம் நமக்கு புரிகிறது. காலம் காலமாய் மனித இனம் வன்முறைக்கு எதிராய் எழுப்பிய ஓலம் தான் அது. ஈழத்திலும், குஜராத்திலும், மும்பை குண்டு வெடிப்புகளிலும், ஈராக்கிலும் எழுப்ப ப்படும் ஓலம் தான் அது. இந்த நொடியிலும் உலகின் ஏதாவதொரு மூலையில் இந்த ஓலம் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் நம் காதை செவிடாக்க நாம் பழகிக் கொண்டிருக்கிறோம்.

பின் குறிப்பு:- இந்த படுகொலையில் இஸ்ரேலியத் துருப்புகளுக்கு தொடர்பு உண்டா என்றறிய ஒரு விசாரணைக் குழும்ம் அமைக்கப்படட்து. அதன் தீர்ப்பின்படி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏரியல் ஷரோனுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இருபது வருடம் கழித்து பின் அவரே இஸ்ரேலின் அதிபரானார்.

4R3CAWYX9HR7

Sunday, November 15, 2009

பதிவாகும் பழங்குடி வாழ்வு

பழங்குடியினருக்கு பாதுகாப்பும் அவர்களை தங்களது நிலங்களிடமிருந்து அந்நியப்படுத்தாமலிருப்பதற்கு வகை செய்யும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்தாம் பிரிவு இப்போது வெறும் முகப்பூச்சாகவே காட்சியளிக்கிறது.
-அருந்ததி ராய்

இதுகாறும் நடந்த அனைத்து இனப் போராட்டங்களிலும் அதன் நாயகர்கள் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் வீரத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் வரலாறு அவருக்கு இணையாக போராடி துயரங்கள் அனுபவித்த அவரது படைவீரர்கள் குறித்து முணுமுணுப்பது கூட இல்லை. குறிப்பாக பழங்குடியினரின் போராட்டங்கள் பதிவு செய்ய அருகதையற்றதாகவே பல வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்பட்டு வந்திருக்கின்றன. அவர்களது போராட்டங்கள் மறக்கடிக்கப்பட்டதோடு நில்லாமல் இந்தியாவை இந்தியா என்று அழைக்கும் முன்பிருந்தே அவர்கள் வாழ்ந்த நிலத்தை அவர்களிடமிருந்து பிடுங்கும் அராஜகத்தை அனைத்துக் கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன், தனது செல்வம் கொழிக்கும் செல்ல குடிமகன்களுக்காக நடத்தி வருகிறது.
இச்சூழ்நிலையில் பழங்குடி மக்களின் போராட்டங்களை முதன்மைப்ப்டுத்தியிருக்கும் பழஸ்ஸிராஜா திரைப்படம் நம் கவனத்துக்குரியதாகிறது. மம்மூட்டி, சரத்குமார் போன்ற நட்சத்திர நாயகர்கள் நடித்து ஹரிஹரன் என்ற சர்வதேச கவனத்துக்குரிய இயக்குநர் இயக்கிய.இத்திரைப்படத்தின் விளம்பரத்திற்கு ‘மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவான திரைப்படம்’ எனும் எதிர்பார்ப்பு மற்றும் கனிகாவின் ‘பட்ஜெட்’ உடை போஸ்கள் போன்ற மலிவான உத்திகள் பயன்படுத்தப்பட்டபோது ஹரிஹரனின் Auteur வகை இயக்குநர் பிம்பம் சற்றே அசையத் தொடங்கியது உண்மைதான். ஹரிஹரனும் தன் Auteur முகத்தை சில இடங்களில் மட்டுமே காண்பிக்கிறார். ( போர் தொடங்கியதன் குறியீடாக வெள்ளைக் குதிரை நீர்வெளியை பாய்ச்சலாக கடந்து வருவது ).
பொதுவாக மலையாள திரைப்படங்களில் Mise-en-scene குறித்து அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இத்திரைப் படத்தில் அதை மிகச் சிறப்பாக செயதிருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டு மனிதர்கள், உடைகள், கலாச்சாரம், ஆகியவற்றை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதுவும் அடர்ந்த காட்டிற்குள் நடக்கும் அந்த guerilla யுத்தக் காட்சிகள் சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சில இடங்களில் நாயகர்கள் பறந்து பறந்து சண்டையிடுவது செயற்கையாக உள்ளது. மம்மூட்டி, சரத்குமார், பத்மப்ரியா, போன்ற பிரதான நடிகர்கள் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் முக்கியமாக பத்மப்ரியாவின் நடிப்பு அபாரம். அவரது உடல்மொழி, பழங்குடிப் பெண்ணின் தமிழ் கலந்த உச்சரிப்பு , சிக்கலான முக பாவங்கள் , அவர் தேசிய விருது வாங்கும் நாள் வெகு தூரம் இல்லை என்று கட்டியம் கூறுகின்றன..ஆனால் துணை கதாபாத்திரங்கள் மலையாள வணிக சினிமாவுக்கே உரிய நாடகத்தனமான உடல்மொழியை வெளிப்படுத்துவது நெருடுகிறது.
படத்தின் மிக முக்கிய குறை மேலோட்டமான கதாபாத்திரங்கள்.மற்றும் அதனால் உண்டாகும் க்ளீஷேயான காட்சிகள். குறிப்பாக கனிகாவின் பாத்திரம். அனைத்து விடுதலைப் போராட்ட திரைப்படங்களிலும் அடித்து துவைக்கப்பட்ட பாத்திரம். மம்மூட்டி, சரத்குமார், மனோஜ்.கே.ஜெயன், கல் நெஞ்சக்கார பரங்கியர்கள், அவர்களுக்கு நடுவில் இரக்க குணம் கொண்ட ஒரு பெண் என பல பாத்திரங்கள் நமக்கு மிக பழக்கப்பட்டவையாதலால் காட்சிகள் திரையில் விரியும் முன்னே நம் மனதில் விரிந்து விடுகிறது. ஒரே விதிவிலக்கு நீலி (பத்மப்ரியா) பாத்திரம். அந்த கோபக்கார போராளிப் பெண் படம் முடிந்த பின்னும் நம்முடன் பயணிக்கிறாள். ஆனாலும் அப்பாத்திரத்தின் முடிவை காண்பிக்காதது நெருடல். இளையராஜாவின் இசையும் ,ரசூல் பூக்குட்டியின் ஒலிச்சேர்க்கையும் படத்துடன் நம்மை நெருங்க உதவுகிறது.. ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய எம்.டி.வி.யின் வசனங்கள் படத்தின் மற்றுமொரு பலம். “ வாழ்க்கை முழுக்க தொடர்ந்து வரும் நிழல் ஒரு கட்டதில் நம் எதிரே வந்து நிற்கும். அதுதான் மரணம்.” என்பது ஓர் உதாரணம். கதையின் போக்கு பல இடங்களில் ஈழ விடுதலைப் போரை நினைவு படுத்துகிறது. வழக்கம் போல் ஒரு வீரனின் கதையை எடுத்திருந்தாலும் விடுதலை போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்கு பற்றி பதிவு செய்த வகையில் இது முக்கியமான திரைப்படமாகின்றது.
அண்மையில் வெளிவந்த, பழங்குடி மக்களின் போராட்டங்களை சம கால பிண்ணனியில் பேசும் பேராண்மை திரைப்படத்தை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
இது ஒரு சாதாரண action திரைப்படம் என்றாலும் அதன் பிண்ணனியில் சொல்லப்படும் அரசியல் மிக வலுவானது. சாதி வேறுபாடு படிக்காதவர்களுக்குத்தான். படித்த அதிகாரிகள் மத்தியில் இல்லை என்று கட்டப்பட்ட பிம்பத்தை இயக்குநர் தைரியமாக உடைத்துப் போட்டிருக்கிறார். தணிக்கைக்குப் பின் (பாதி சாதி வசவுகளுக்கும் மீதி இரட்டை அர்த்தத்திற்கும்) கிடைக்கும் வசனங்கள் சாட்டையடிகள் இயற்கை வேளாண்மை , சாதிப் பிரச்சினை, பழங்குடி மக்களின் இடப்பெயர்ச்சி, அரசியல் பொருளாதாரம், ஆகியவற்றை உரத்த குரலில் அழுத்தமாக சொல்லியிருப்பதன் மூலம் தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் (அப்படி ஒன்று இருந்தால்) முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

Monday, June 29, 2009

முதல் வார்த்தை

யணங்கள் உண்டாக்கும் சுவடுகள் நம் மனமெங்கும் கடற்கரை மணற்துகள்களாய் பரவி கிடக்கின்றன. முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பயணங்கள் நம்மை செதுக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வலைப்பூவின் மூலம் எனது இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன். என் சக பயணிகளுக்கு வந்தனம்.


சினிமா! என்னவொரு வசீகர சொல். சிறு வயதில் திரையரங்குக்கு செல்ல முடிவெடுத்தவுடன் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும் அந்த இருண்ட, குறுகிய பாதையில், சுவாசமுட்டும் நெரிசலுக்கு மத்தியில், மனதில் அலையடிக்கும் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள், அரங்கில் விளக்குகள் அணைகையில் திரையில் குவியும் கவனம், பின்னாலிருந்து வரும் ஒளி திரையில் விரியும்போது அடுத்து கண்முன்னே நடக்கவிருக்கும் மாயாஜாலம் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை மனதில் இன்னும் ஓர் இம்ப்ரெஸனிஷ ஒவியத்தின் காட்சிகளாய் பதிந்திருக்கின்றன.. இப்போதைய மல்டிப்ளக்ஸ் யுகத்தில் இந்த நடைமுறைகள் மாறினாலும் சினிமாவிடம் உள்ள உறவு அப்படியே தான் இருக்கிறது.


தொடர்ந்து கண்ட சினிமாக்களின் விளைவால் வணிக திரைப்படங்களின் சூத்திரங்கள் விளங்கி, அவை அலுத்துப்போய் மாறுதலுக்கு மனம் விழைகையில், உலக சினிமா மற்றும் மாற்று சினிமாவின் உலகம் கண்ணில் பட்டது. அவற்றை கண்டபோது புரிந்த சினிமாவின் அசுர பலம் என்னை மிரள வைத்து, ஒரு சுழல் போல உள்ளிழுத்துக் கொண்டது. இந்த வலைப்பூ, மாற்று சினிமா மற்றும் உலக சினிமாவின் உலகில் எனது தேடல் குறித்த பகிர்வுகளாகவும், அவற்றின் புதிய போக்குகள், அவை நமது சினிமாவை பாதித்த விதம், நம் மண்ணின் புதிய அலை சினிமாக்கள் ஆகியவை குறித்த விவாத களமாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். சகபயணிகளுக்கும், முகமறியா சகபயணிகளுடன் அந்நியோன்யமான பகிர்தலை சாத்தியப்படுத்திய இணையம் எனும் தொழில்நுட்பத்திற்கும் நன்றி.