Monday, June 29, 2009

முதல் வார்த்தை

யணங்கள் உண்டாக்கும் சுவடுகள் நம் மனமெங்கும் கடற்கரை மணற்துகள்களாய் பரவி கிடக்கின்றன. முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பயணங்கள் நம்மை செதுக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வலைப்பூவின் மூலம் எனது இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன். என் சக பயணிகளுக்கு வந்தனம்.


சினிமா! என்னவொரு வசீகர சொல். சிறு வயதில் திரையரங்குக்கு செல்ல முடிவெடுத்தவுடன் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு, டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும் அந்த இருண்ட, குறுகிய பாதையில், சுவாசமுட்டும் நெரிசலுக்கு மத்தியில், மனதில் அலையடிக்கும் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள், அரங்கில் விளக்குகள் அணைகையில் திரையில் குவியும் கவனம், பின்னாலிருந்து வரும் ஒளி திரையில் விரியும்போது அடுத்து கண்முன்னே நடக்கவிருக்கும் மாயாஜாலம் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை மனதில் இன்னும் ஓர் இம்ப்ரெஸனிஷ ஒவியத்தின் காட்சிகளாய் பதிந்திருக்கின்றன.. இப்போதைய மல்டிப்ளக்ஸ் யுகத்தில் இந்த நடைமுறைகள் மாறினாலும் சினிமாவிடம் உள்ள உறவு அப்படியே தான் இருக்கிறது.


தொடர்ந்து கண்ட சினிமாக்களின் விளைவால் வணிக திரைப்படங்களின் சூத்திரங்கள் விளங்கி, அவை அலுத்துப்போய் மாறுதலுக்கு மனம் விழைகையில், உலக சினிமா மற்றும் மாற்று சினிமாவின் உலகம் கண்ணில் பட்டது. அவற்றை கண்டபோது புரிந்த சினிமாவின் அசுர பலம் என்னை மிரள வைத்து, ஒரு சுழல் போல உள்ளிழுத்துக் கொண்டது. இந்த வலைப்பூ, மாற்று சினிமா மற்றும் உலக சினிமாவின் உலகில் எனது தேடல் குறித்த பகிர்வுகளாகவும், அவற்றின் புதிய போக்குகள், அவை நமது சினிமாவை பாதித்த விதம், நம் மண்ணின் புதிய அலை சினிமாக்கள் ஆகியவை குறித்த விவாத களமாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். சகபயணிகளுக்கும், முகமறியா சகபயணிகளுடன் அந்நியோன்யமான பகிர்தலை சாத்தியப்படுத்திய இணையம் எனும் தொழில்நுட்பத்திற்கும் நன்றி.