Monday, March 1, 2010

வன்முறை - ஒரு தீரா கொடுங்கனவு

மானுடம் உருவான காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் மாபெரும் எதிரியாக வன்முறையே இருந்து வந்துள்ளது. அதற்கு தீர்வான அன்பை வளர்ப்பதற்கு முன்மொழியப்பட்ட மதங்களே தற்போது வன்முறையின் ஊற்றுக்கண்ணாக உள்ளது காலத்தின் நகைமுரண். வன்முறை ஒரு தீரா கொடுங்கனவாய் நம் வாழ்வை பின் தொடர்ந்து வருகிறது. அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களை மையமாக கொண்ட படம்தான் WALTZ WITH BASHIR.

கோட்டுச் சித்திர(animation) திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கானவை என்ற பரவலான கருத்தை முதலில் உடைத்தது ஒரு ஈரானியப் பெண்ணின் கதையை இசுலாமிய புரட்சியின் பின்புலத்தில் கூறிய ஃப்ரெஞ்ச் திரைப்படமான persepolis. அடுத்து 2008 இல் வெளியான இஸ்ரேலிய புனைவிலி விவரணப் படமான WALTZ WITH BASHIR.

முதல் காட்சியில் உக்கிரமானதொரு நாய்க் கூட்டம் நகரின் சாலைகளில் வெறி கொண்டு ஒடுகிறது. மக்கள் பயந்து இரு பக்கமும் சிதறியடித்து ஓடுகிறார்கள். அவற்றில் ஒரு நாய் மூச்சிரைக்க, எச்சில் ஒழுக, நின்று குரோதத்துடன் நம்மை பார்க்கும் அந்த ஒரு நொடி அண்மைக் காட்சியில் கோட்டுச் சித்திரம் என்பதையும் மீறி முதுகுத் தண்டு சில்லிடுகிறது. அவை எல்லாம் ஒரு வீட்டின் முன் கூடி நின்று குரைக்கின்றன.

ஒரு பாரில் இந்த படத்தின் இயக்குநர் அரி போல்மன்னிடம் இக்காட்சியை விவரிக்கும் நண்பன் அவை தன்னை கொல்லத்தான் கூடியிருப்பதாகவும் இக்கனவு இரண்டரை வருடங்களாக தொடர்ந்து வருவதாகவும் கூறுகிறான். இதற்கு காரணமாக லெபனான் போரில் தான் மனிதர்களை கொல்ல பயந்ததனால் இரவில் இடையூறு விளைவிக்கும் நாய்களை கொல்ல பணிக்கப்பட்ட போது 26 நாய்களை கொன்றதாகவும், அவற்றின் ஒவ்வொரு முகமும் நினைவிருப்பதாகவும் அவை தான் தினமும் கனவில் வருவதாகவும் கூறுவதோடு அதே போரில் பணியாற்றிய இயக்குநருக்கு இது போல ஒரு சம்பவமும் நினைவில்லையா என்றும் வினவுகிறான். தான் பணியாற்றிய போரை குறித்த நினைவுகள் தனக்கு இல்லாதது குறித்து ஆச்சரியமடையும் இயக்குநர் அது குறித்த தனது தேடல்களை தொடங்குகிறார்.

இத்திரைப்படத்தை புரிந்து கொள்ள சில பின்புல தகவல்கள் அவசியமாகின்றன. 1982 இல் இஸ்ரேல் அரசு தெற்கு லெபனானிடமிருந்து வந்த பாலஸ்தீன தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்க 40 கி.மீ பாதுகாப்பு வட்டத்திற்கு லெபனானிலுள்ள தீவிரவாதிகளை ஒழிக்க தன் ராணுவத்தை அனுப்பியது . ஆனால் அப்போது . இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராய் இருந்த ஏரியல் ஷரோனிடம் வேறொரு ரகசிய திட்டம் இருந்தது. தன் ராணுவத்தை பெய்ரூட் வரை அனுப்பி அங்கு க்ரிஸ்டியன் பலாங்கிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஷீர் கெமாயலை அதிபராக்குவதன் மூலம் சிரியா பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என்று கணக்கிட்டார்.

இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட்டின் நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்த போது உண்டான பாலஸ்தீன ஒப்பந்தப்படி பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீன போராளிகள் அனைவரும் துனீஷியாவுக்கு வெளியேறினார்கள். அந்த வாரத்தில் லெபனான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் பிரியத்துக்குரிய பஷீர் ( பெய்ரூட் நகரெங்கும் அவரது முகமே நிறைந்திருக்கிறது.) கொல்லப்படுகிறார்.(ராஜீவ் காந்தி நினைவுக்கு வருகிறாரா?)

அன்று இரவு பஷீர் கட்சியை சேர்ந்த பாலங்கிஸ்ட் ராணுவத்தினர் பாலஸ்தீன முஸ்லீம்கள் நிரம்பியிருக்கும் சாப்ரா மற்றும் ஷாடிலா அகதிகள் முகாம்களுக்குள் நுழைகின்றனர். இஸ்ரேலியத் துருப்புக்கள் முகாம்களை சுற்றியிருக்க உள்ளே கொடூரமான படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.சுமார் 3500 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

இந்த இனப்படுகொலைதான் படத்தின் மையம். இயக்குநருக்கு போரைப் பற்றிய நினைவுகளில் இந்த படுகொலை நாளன்று தான் நீரிலிருந்து எழுந்து வருவது போன்ற ஒற்றை பிம்பத்தை தவிர ஒன்றுமே நினைவிலில்லை. தன்னுடன் பணிபுரிந்தவர்களை தேடிப் பிடித்து பேசுகிறார். நத்தை தன் கூட்டை சுமந்து கொண்டு செல்வதைப் போல ஒவ்வொரு போர் வீரனும் தன்னுடன் ஒரு கதைக்கிடங்கை சுமந்து செல்கிறான். ஒவ்வொருவரும் அவ்ர்களை பாதித்த சம்பவங்களைக் குறித்து சொல்கிறார்கள். ஒரு நண்பர் கரையிறங்கியவுடன் பயத்தினால் கண்ணில் கண்டதையெல்லாம் சுட்ட சம்பவத்தை கூறுகிறார். ஒரு கார் அவர்களை எதிர்பட ஒட்டுமொத்த துருப்பும் அந்த காரை குறி வைத்து சுட்டுத்தள்ளுகிறது. சில நிமிட துப்பாக்கிச்சூட்டிற்குப் பின் அவர்கள் காரை நெருங்குகிறார்கள. உள்ளே ஒரு அப்பாவி குடும்பம் பலியாகி கிடக்கிறது. இன்னொருவர் தங்களை தாக்க வந்த ஒரு பொடியனை அனைவரும் சேர்ந்து சுட்ட சம்பவத்தை சொல்கிறார். இப்படி படம் முழுவதும் சம்பவங்கள் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டபடி செல்கின்றன. போரின் வலியை நம் மீது இறக்கி வைக்கிறார் இயக்குநர்.

போரின் போது செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் படுகொலை தினத்தன்று நடந்த சம்பவங்களை விவரிக்கிறார். படுகொலைக்குப் பின் முகாமிற்குள் செல்கிறார். சிதிலமடைந்த வீடுகளும் சிதறிக்கிடக்கும் உடல்களும் அதிர வைக்கிறது. சிதிலங்களுக்கு மத்தியில் ஒரு சிறு கை அவர் கவனத்தை ஈர்க்கிறது. சின்னஞ்சிறு கை. அருகில் செல்கிறார். சுருள் முடி தெரிகிறது. கூர்ந்து பார்த்தால் ஒரு பெண் குழந்தையின் முகம். மூக்கு வரை மட்டுமே வெளித்தெரிந்த முகம்.

கூட்டமாய் பெண்கள் ஓலமிட்டுக் கொண்டே வருகிறார்கள். அவர்கள் அருகில் வருகையில் அது வரை கோட்டுச் சித்திரமாயிருந்த படம் திடீரென உயிர் பெற்று நம்மை அதிர வைக்கிறது. இது அத்தனையும் நடந்த சம்பவம் எனும் நிஜம் முகத்தில் அறைகிறது. காமிரா முன் வயிறு எரிய சாபமிடுகிறார்கள். அந்த பகுதிக்கு SUB- TITLE இல்லை. அவர்கள் மொழியும் தெரியாது. ஆனாலும் அந்த ஓலம் நமக்கு புரிகிறது. காலம் காலமாய் மனித இனம் வன்முறைக்கு எதிராய் எழுப்பிய ஓலம் தான் அது. ஈழத்திலும், குஜராத்திலும், மும்பை குண்டு வெடிப்புகளிலும், ஈராக்கிலும் எழுப்ப ப்படும் ஓலம் தான் அது. இந்த நொடியிலும் உலகின் ஏதாவதொரு மூலையில் இந்த ஓலம் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் நம் காதை செவிடாக்க நாம் பழகிக் கொண்டிருக்கிறோம்.

பின் குறிப்பு:- இந்த படுகொலையில் இஸ்ரேலியத் துருப்புகளுக்கு தொடர்பு உண்டா என்றறிய ஒரு விசாரணைக் குழும்ம் அமைக்கப்படட்து. அதன் தீர்ப்பின்படி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏரியல் ஷரோனுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இருபது வருடம் கழித்து பின் அவரே இஸ்ரேலின் அதிபரானார்.

4R3CAWYX9HR7

No comments: